Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

மன அழுத்த சமயத்தில் மனம் விட்டு பேச உளவியலாளர்களை இணைக்கும் ஆப் - சிஏ பட்டதாரியின் உன்னத முயற்சி!

சிஏ படித்து முடித்துவிட்டு கைநிறைவான சம்பளம் வாங்கியவர் கார்த்திக் மணிகொண்டா. நண்பன் எடுத்த தவறான முடிவால் மன ஆரோக்கியம் சார்ந்த ஸ்டார்ட் அப் `Mind & Company' தொடங்கி, இன்று பலருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குவதோடு குறைவில்லாத வருமானத்தையும் பெறுகிறார்.

மன அழுத்த சமயத்தில் மனம் விட்டு பேச  உளவியலாளர்களை இணைக்கும் ஆப் - சிஏ பட்டதாரியின் உன்னத முயற்சி!

Monday June 17, 2024 , 7 min Read

மனித மூளையை அடிமையாக்க எங்கும் நிறைந்திருக்கும் தொழில்நுட்பம், தேவைக்கு அதிகமான சவுகரியங்கள், எதிலுமே எளிதில் சலிப்பு வந்துவிடும் மனோபாவம் நம்முடைய வாழ்வில் மன அழுத்தத்தை பொதுவானதாக்கி இருக்கிறது.

'மன அழுத்தம்' என்கிற வார்த்தை இப்போதெல்லாம் 9 வயதிலேயே தொடங்கிவிடுகிறது, அதில் சில உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு விடுகிறது என்பது அதிர்ச்சியான விஷயம். அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம் நாள்பட்ட மன ஆரோக்கியமின்மைக்கு வழிவகுக்கும்.

மனிதனின் உள் உடல் உறுப்புகள் சார்ந்த நோய்களைப் போலவே உணர்வுகளைச் சார்ந்த மனநோயும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகி விட்டது. உணவு, உடை, பயணம் என எல்லாவற்றையும் எளிமையாக்கித் தர பல செயலிகள் வரிசை கட்டிக் கொண்டிருக்க சமூகத்தின் இன்றைய தேவைக்கான தீர்வைத் தரும் மன ஆரோக்கியத்திற்காக The Mind and Company என்ற ஸ்டார்ட் அப் தொடங்கி அதனை சென்னையில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் நிறுவனர் கார்த்திக் மணிகொண்டா.

"இந்தியாவில் நாள்தோறும் 450 தற்கொலைகள் நடக்கின்றன, உலக அளவில் பார்க்கும் போது இந்தியர்களுக்கு அதிக மன அழுத்தம் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுகிறோம், ஆனால், கண்ணிற்கு தெரியாத மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பு என்றால் மருத்துவ உதவி நாட தயங்குகிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும், மனம்விட்டு பேசி தங்களது பிரச்னைகளில் இருந்து வெளிவர முடியாதவர்களை உளவியலாளர்கள் உதவியை பெற்றுத்தரவேண்டும் என்று இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியதாக கார்த்திக் மணிகொண்டா கூறினார்.
நிவேதிதா

நிவேதா, கார்த்திக் மணிகொண்டா, நிறுவனர்கள், தி மைண்ட் அண்ட் கம்பெனி

சலிப்பை தந்த அலுவலகப் பணி

கார்த்திக்கின் சொந்த மாநிலம் ஆந்திராவாக இருந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பட்டய கணக்காளர் (Chartered accountant) தேர்ச்சி பெற்று கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் நல்ல மாத ஊதியத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

“திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மீண்டும் அடுத்த வாரம் அதே வேலை என்பது சலிப்பைத் தந்தது. என்னைச் சுற்றி இருக்கும் பலரைப் பார்த்தேன் ஊதியம் என்ற ஒரு விஷயத்திற்காக மட்டுமே மன அழுத்தங்களையும் தாண்டி பணியாற்றிக் கொண்டிருந்தனர், சிலருக்கு அலுவலகப் பணி மகிழ்ச்சியானதாக இருந்தாலும் பலரின் மனநிலை அப்படி இல்லை.

அந்த சமயத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரும் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொள்ளப்போனார். அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் பெரிய பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தின. அதற்கான ஒரு தீர்வைத் தேடியே நானும் சிஏ பட்டதாரியுமான என் மனைவி நிவேதாவும் சேர்ந்து முதலில் 2020 ஆகஸ்டில் இன்ஸ்டாகிராமில் The Mind and Company என்ற பேஜை தொடங்கினோம். அதில், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு எப்படி ஆலோசனை பெறலாம் என்பதைப் பற்றிய விவரங்களை பகிரத் தொடங்கினோம். 2021 ஜனவரியில் அதிகாரப்பூர்வ நிறுவனமாக 'தி மைண்ட் அண்ட் கம்பெனி' மாறியது.

உளவியலாளர்கள் தேவைப்படும் நேரத்தில் ஆலோசனை வழங்குபவர்களாக கமிஷன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து செயல்படத் தொடங்கினோம். 2020ல் ஸ்டார்ட் அப் தொடங்கியதும் அடுத்த சில மாதங்களில் பண மழை கொட்டப் போகிறது என்று நினைத்தேன், ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

முதல் மாதம் எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன், இரண்டாவது மாதம் நான் எதிர்பார்த்த அளவில் தெரபி நாடுபவர்கள் பதிவு செய்யவில்லை, மூன்றாவது மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்னுடைய சேவை தேவை என்று எதிர்பார்த்தேன், 4வது மாதம் என் மீதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சேமிப்புகள் குறையத் தொடங்கியது, தோல்வியடைந்து விடுவோமோ என்கிற எண்ணம் என்னை ஆட்கொண்டது.

மன ஆரோக்கியம் குறித்து தெரபிஸ்டுகளிடம் கலந்து பேசத் தொடங்கினேன், அதன் பின்னர், ஒரு நம்பிக்கை கிடைத்தது. தொடக்கத்திலேயே வெற்றியை ருசித்துவிடாமல் தொலைநோக்கு பார்வையில் இலக்கின் சிகரத்தை அடைவதே நிலையான வெற்றி என்பதை தெரபி எனக்குத் தந்தது.

குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிஏ பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு எடுக்கத் தொடங்கினேன். என்னுடைய தொலைநோக்கு திட்டம் 3 ஆண்டுகள் கழித்து பலித்தது, இப்போது 'தி மைண்ட் அண்ட் கம்பெனி' ஒரு சிறந்த mental health நிறுவனமாக மாதாமாதம் வளர்ச்சியடைகிறது, 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.

சிஏ பயிற்சி வகுப்பு

சிஏ பயிற்சி வகுப்பெடுக்கும் கார்த்திக்

தெரபிகள் எப்படி வழங்கப்படுகின்றன?

தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் புரமோஷன், சமூக ஊடகத்தில் பிரபலமானவர்களை வைத்து எங்களிடம் ஆலோசனைகள் மற்றும் தெரபிகள் பற்றி மக்களுக்கு புரிய வைத்தோம். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருக்கும் உளவியலாளர்களுடன் சேர்ந்து செயல்படத் தொடங்கினோம். இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் இருப்பவரும் ஆன்லைன் மூலம் எங்களை தொடர்பு கொண்டு மனம் சார்ந்த பிரச்னைகளுக்கான தெரபிகளை எடுத்துக் கொள்ளலாம்.

2021 நிறுவனம் தொடங்கிய ஆரம்பத்தில் மாதத்திற்கு 50 ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வந்தோம். ஆனால், மூன்று ஆண்டுகளில் இப்போது மாதத்திற்கு 800க்கும் மேற்பட்டவர்களுக்கு தெரபிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். தெரபி பெற விரும்புபவர்களின் தேவைக்கு ஏற்ப Google meet, Zoom மூலம் தொடக்கத்தில் ஆன்லைன் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்குப் பின்னர் எங்களுடைய இணையதளத்திலேயே தெரபிக்கான பதிவு தொடங்கி, கட்டணம், வீடியோ கால் வரை அனைத்து வசதிகளையும் பெறும் தொழில்நுட்பத்தை உருவாக்கினோம், என்கிறார் கார்த்திக்.

சேமிப்பே முதலீடு

என்னுடைய படிப்பிற்கும் நான் தேர்வு செய்த தொழில்முனைவுக்கும் எந்தத் தொடர்புமே இல்லை. ஆனால், சமூகத்திற்கு ஏதேனும் திருப்பி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. மன ஆரோக்கியத்திற்கான ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என்று சிந்தித்து முதலில் என்னுடன் இணைந்து பணியாற்ற வந்த உளவியலாளர் பிரியாவிற்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த நிறுவனத்தை முதன்முதலில் செயல்படுத்தத் தொடங்கினோம்.

பிரியா உளவியலாளர் என்பதால் தெரபிகளை எப்படி கொடுக்க வேண்டும், கட்டணம் எப்படி வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட திட்டமிடல்களை வகுத்துக் கொடுத்தார். என்னுடைய சொந்த சேமிப்பான 5 லட்ச ரூபாயை முதலீடாக்கி நம்பிக்கையோடு இந்த கம்பெனியின் செயல்பாடுகள் அனைத்தும் பொறுப்புடன் கவனிக்கத் தொடங்கியதன் விளைவாகவே 3 ஆண்டுகளுக்கு பின்னர் எங்களின் நிறுவனம் நற்பெயரை பெற்றிருக்கிறது.

priya

பிரியா, உளவியலாளர், இணை நிறுவனர், தி மைண்ட் அண்ட் கம்பெனி மற்றும் கார்த்திக் மணிகொண்டா, நிறுவனர், தி மைண்ட் அண்ட் கம்பெனி

விளம்பரம் எதுவும் செய்யாமலே சர்வதேச அளவில் 15 முதல் 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்களின் தெரபிகளை ஆன்லைனில் எடுத்து வருகின்றனர். சென்னை, கேரளா, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புனே, டெல்லி மற்றும் குருகிராம் உள்ளிட்ட 10 இடங்களில் உளவியலாளர்களின் நேரடி ஆலோசனையை பெறலாம்.

“எங்களிடம் ஆலோசனை பெறுபவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தொழில் பெரிய அளவில் வளர்ந்த பின்னர் நிச்சயமாக இதே ஊர்களில் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தயங்காமல் யார் வேண்டுமானாலும் வந்து மனம் விட்டு பேசிச் செல்லும் ஒரு இடமாக அமைக்கவும் திட்டம் வைத்துள்ளோம்,“ என்கிறார் கார்த்திக்.

எங்களுடைய பிரதான சேவையானது தனிநபர்களுக்கான தெரபி. ஆனால் அதுமட்டுமின்றி தியானம், தூக்கத்திற்கான கதைகள், மனநலத்திற்கான இதழ்கள், திட்டமிடல்கள் போன்றவற்றையும் நாங்கள் வழங்குகிறோம்.

தேவையின் அடிப்படையில் மனநல ஆரோக்கியத்திற்கு எத்தனை நாட்கள் தெரபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். கார்ப்பரேட் நிறுவனங்களில் குழுக்களுக்கு மனநல ஆலோசனைகள், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் குழுவினரின் மனநலனில் எப்படி கவனம் செலுத்த வேண்டும் போன்றவற்றை அறிக்கையாக தயாரித்துக் கொடுத்தல் போன்றவற்றையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

யாருக்கு தெரபி தேவை?

எல்லோருடைய வாழ்விலும் இன்பமும் துன்பமும் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். நீடித்த மகிழ்ச்சியும் சோகமும் இல்லை, அப்படி மனம் சோர்வாக இருக்கும் போது சில நேரங்களில் நீங்களே அதில் இருந்து மீண்டு வந்துவிடுவீர்கள். ஆனால் உறவுமுறையில் விரிசல், வேலைஇழப்பு போன்ற காரணங்களால் மன ஆரோக்கியம் கெடுகிறது.

ஒரு வாரம், மாதம் என நாட்கள் கடக்கிறது உங்களால் சரியாக தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை என்றால் இதுவே நீங்கள் ஒரு உளவிளலாளரை சந்தித்து தெரபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அறிகுறி. ஒரு நண்பரிடமோ உறவினடமோ உங்களது பிரச்னையை பகிர்ந்து கொள்ளலாம் ஆனால், அவர்கள் உங்களைப் பற்றிய ஒரு தீர்மானத்துடனே இருப்பார்கள், அவர்களிடத்தில் உங்களது பிரச்னைக்கான சரியான ஆலோசனை கிடைக்காது.

“அதுவே ஒரு உளவியலாளர் என்றால் அவர் உங்களைப் பற்றிய எந்தத் தீர்மானத்துடனும் இருக்க மாட்டார், உங்களது பிரச்னையை முழுவதுமாகக் கேட்பார். உங்களுக்காக அவர் எந்த இறுதி முடிவையும் எடுக்க மாட்டார், மாறாக பல கட்டங்களாக உங்களுக்கு தெரபி வழங்குவார், அப்போது அவர் கேட்கும் உங்கள் பிரச்சனை தொடர்பான கேள்விக்கான பதிலை நீங்களே தேடும் போது உங்களது பிரச்னைக்கான தீர்வையும் நீங்களே முடிவு செய்வீர்கள்.“

பிரச்னைக்குத் தீர்வும் சுதந்திரமான செயல்பாடும்

வாரத்திற்கு ஒரு முறை, 2 வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒருமுறை அதன் பின்னர் உங்களால் தனிப்பட்டு இயங்க முடியும் என்கிற நிலை வந்த பின்னர் தெரபி முடிவுக்கு வந்துவிடும். தெரபி வழங்குவதன் முக்கிய நோக்கமே நீங்கள் யாரையும் சாராமல் தனித்து உங்களது உணர்ச்சிகளைக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அந்த நிலைக்கு ஒருவர் வந்துவிட்டால் அதன் பின்னர் அவருக்கு தெரபி தேவையில்லை.

சிலருக்கு மருந்துகளின் உதவி தேவை என்றால் சரியான மனநோய்க்கான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவரை அணுகி மருத்துவ உதவியை எடுத்துக் கொள்ள தெரபிஸ்ட் பரிந்துரைப்பார்.

விழிப்புணர்வு அவசியம்

பெருநகரத்தைச் சேர்ந்தவர்களுக்கே மனஆரோக்கியத்திற்கு தெரபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருக்கிறது. இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருபவர்கள் மிகக்குறைவே. அதற்காக அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தமில்லை, அவர்களுக்கான விழிப்புணர்வு இல்லை என்பதே நிதர்சனம்.

“உடல் ஆரோக்கியம் போலவே மனிதனுக்கு மன ஆரோக்கியமும் மிக முக்கியம். அதே போன்று நான் இந்த துறைக்கு வந்த பின்னர் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் தெரபிக்கு வருபவர்கள் பெரும்பாலும் பெண்களே, அதற்காக ஆண்களுக்கு பிரச்னை இல்லை என்று அர்த்தமல்ல ஆண்பிள்ளை அழக்கூடாது என்கிற கௌரவத்திற்கு பின்னால் இவர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் மன இறுக்கம் குறைய, மனதில் இருக்கும் சுமையை கடந்து சரியான முடிவெடுக்க தெரபி அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்,“ என்கிறார் கார்திக்.
தி மைண்ட் அண்ட் கம்பெனி குழுவினர்

தி மைண்ட் அண்ட் கம்பெனி குழுவினர்

கட்டணம் எவ்வளவு?

ஆலோசனை பெறுபவரின் பொருளாதர நிலைக்கு ஏற்ப ரூ.350 முதல் ரூ.5000 வரை கட்டணமாக வசூலிக்கிறோம். கட்டணம் மாறுபடுவதால் தெரபி வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது. தொடக்கத்தில் இலவசமாகக் கூட தெரபிகளை வழங்கினோம், ஆனால், ஆன்லைனில் ஆலோசனைக்கான நேரம் வாங்கிவிட்டு அதனை பலரும் அலட்சியப்படுத்தியதால் அந்த முறை கைகொடுக்காது என்பதால் கட்டணம் செலுத்திய பின்னரே ஆலோசனை என்கிற நிலையை எடுத்தோம். அதுவே தெரபி எடுத்துக் கொள்ள வருபவருக்கும் ஒரு அக்கறையை தருகிறது.

எனினும், இப்போது உண்மையாகவே பொருளாதார ரீதியில் வசதி படைத்தவராக இல்லாவிட்டால் அவர்களுக்கு கட்டணமில்லாத உளவியல் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். தேர்வு நேரங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச ஆலோசனையை வழங்கி அவர்களுக்கு மனதளவில் ஒரு உறுதியை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் செய்துவருகிறோம்.

மாதம் ரூ.6 லட்சம்

ரூ.5 லட்சம் முதலீட்டுடன் இந்த ஸ்டார்ட் அப்பை தொடங்கினேன். ஆரம்பத்தில் லாபம் என்பது என்னுடைய நோக்கமல்ல, எனினும், முதல் நாளில் இருந்தே எங்கள் நிறுவனம் லாபகரமானதாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான முறையில் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது, பணப் பரிவர்த்தனையில் இது வரையில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

“3 ஆண்டுகளில் இப்போது மாதத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. எதிர்காலத்திலும் கூட வருமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் கூடுதல் நிதி கிடைத்தால் 5 ஆண்டுகளில் இந்தத் தொழில்முனைவு அடையும் இலக்கை ஒரே ஆண்டில் அடைந்துவிட முடியும். குழுவை விரிவாக்கம் செய்ய முடியும் தொழில்நுட்ப ரீதியாகவும் எங்களால் மேலும் வளர்ச்சி அடைய முடியும்.“

மெட்டா வெர்சின் மூலமும் ஆலோசனை வழங்கும் எதிர்காலத் திட்டத்தையும் வைத்துள்ளோம் என்று சொல்லும் கார்த்திக்கின் 'தி மைண்ட் அண்ட் கம்பெனி' 2023ம் ஆணடில் தமிழ்நாடு அரசின் Tanseed 4.0ல் ரூ.10 லட்சம் நிதியை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு

உளவியலாளர் vs ஏஐ ஆலோசனை

செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடி போன்று ரோபோக்களை வைத்து ஆலோசனை வழங்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனம் என்பது உணர்ச்சிகள் சார்ந்த விஷயம், ஒரு அனுபவமிக்க உளவியலாளருடன் தெரபி தேவைப்படுபவர்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறுதல் நிம்மதி என்பது ரோபோக்களிடம் கிடைக்காது என்கிறார் கார்த்திக்.

ஒவ்வொரு தேவைக்கு எப்படி ஒரு செயலி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறதோ அதே போல, மன ஆரோக்கியம் சார்ந்த தேவைக்கு மக்கள் தயக்கமின்றி 'தி மைண்ட் அண்ட் கம்பெனி' செயலியை பயன்படுத்த வேண்டும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் மிக விரைவில் அவர்களின் பிரத்யேக செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.